சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடசென்னையில் வசித்துவந்த ஆம்ஸ்ட்ராங், அப்பகுதியில் முக்கியப் பிரமுகராக வலம்வந்தவர். மேலும், ஏராளமான தலித் இளையர்களின் ஆதரவையும் அவர் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதியன்று பெரம்பூர் அருகே, மாலை வேளையில் மர்ம நபர்களால் அவர் அடித்துக்கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் என்பவர், காவல்துறையின் என்கவுன்டர் படலத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
மூன்று குண்டர் கும்பல்கள் இணைந்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்குத் திட்டமிட்டதும் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலைச்சம்பவம் அரங்கேறி இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான 28 பேர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவானது. எனினும், காவல்துறையின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என்று ஆம்ஸ்ட்ராங் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஆறு மாதக் காலத்துக்குள் இடைக்கால விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.