மதுரை: தலைமைக் காவலர் தாக்கியதில் சிறுவன் கண்பார்வையை இழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் லதா. அவருடைய மகன் பிரேம்நாத்திற்கு இப்போது 17 வயதாகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு சமயநல்லூர் - விளாங்குடி சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார் பிரேம்நாத். அதில் மேலும் இருவர் அமர்ந்திருந்ததாகக் கூறப்பட்டது.
அப்போது, வீரபத்திரன் என்ற தலைமைக் காவலர் கழியால் தாக்கியதில் பிரேம்நாத்திற்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பிரேம்நாத்தின் வலக்கண் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் அதனால் அவரது படிப்பிற்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பிரேம்நாத்தின் தாயார் லதா, அரசுத் தரப்பில் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
இவ்வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மனுதாரர் மகன் ஓட்டுநர் உரிமமின்றி, தலைக்கவசம் அணியாமல் இருவரை அமரச் செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். காவல்துறையினர் அவரது வாகனத்தை நிறுத்த முயன்றபோது, தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்,” என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும், “தலைமைக் காவலர் வீரபத்திரன் இரு சக்கர வாகனத்தை தடுக்க முயன்றதால், இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்கு வேறு எந்தக் காரணமும் கிடையாது. மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவக் குழுவினர் பரிசோதித்ததில் பிரேம்நாத் வலக்கண் பார்வையை இழந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
“தலைமைக் காவலர் தமது பணியைச் செய்துள்ளார். அவர்மீது குற்றம் சுமத்த முடியாது. மனுதாரர், சிறுவனாகிய மகனை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதித்திருக்கக் கூடாது. அது சட்டப்படி குற்றம். ஆனாலும், கண் பார்வை இழந்துள்ள மாணவருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ஆறு வாரங்களுக்குள் ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்,” என்று நீதிபதி உத்தரவிட்டார்.