சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் எதிர்வரும் நவம்பர் 1ஆம் தேதிக்குள் கட்டாயமாகத் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், சென்னை மாநகராட்சி உட்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இயங்கும் கடைகளிலும் தமிழில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
தமிழ்ப் பெயருக்குக்கீழே ஆங்கிலத்தில் பெயர் எழுதிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், விதிகளை மீறும் கடைகளுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த இந்தியச் சில்லறை வர்த்தகர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் முன்னிலையாகி, அரசின் உத்தரவை அமல்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அதற்கு மூன்று மாதக் கால அவகாசம் தேவை என்றும் கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கடைகளின் பெயர்ப் பலகைகளைத் தமிழில் மாற்ற இறுதி வாய்ப்பாக நவம்பர் 1 வரை அவகாசம் வழங்கி வழக்கை முடித்து வைத்தார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெயர்ப் பலகைகளை மாற்றாத கடைகள் மீது உரிய அதிகாரிகள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.


