சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த காப்பீட்டு மோசடிகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள புகார்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஒரே விபத்துக்கு இழப்பீடு கோரி வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து மோசடிச் செயல்கள் அரங்கேற்றப்பட்டு உள்ளன.
அவற்றை காப்பீட்டு நிறுவனங்கள் கண்டுபிடித்து அதுகுறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தன. அவ்வாறு 467 புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
ஆனால், அந்தப் புகார்கள்மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யவில்லை என காப்பீட்டு நிறுவனம் ஒன்று வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இதுவரை காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி 105 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.
காப்பீட்டு நிறுவனங்கள் அளித்துள்ள புகார்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து அந்த வழக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது காவல்துறை தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், காப்புறுதி மோசடி தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தக் காவல்துறை தயாராக உள்ளதாகக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, “ரூ.105 கோடி காப்பீட்டு மோசடி தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள 467 புகார்கள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“எனவே இந்தப் புகார்கள் மீது உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும். அந்த விசாரணையை விரைந்து நடத்த வேண்டும்.
“அதேபோல ஓசூர் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் 82 போலி காப்பீட்டு மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் குறித்தும் மாயமான வழக்குக் கட்டுகள் குறித்தும் மாவட்ட நீதிபதிகள் உரிய விசாரணை நடத்தி அதுகுறித்த அறிக்கையை வரும் அக்டோபர் 17ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை வேறொரு தேதியில் தொடரும் என்று வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.