தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு யானைகளைக் கொண்டுசெல்ல தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு யானைகளைக் கொண்டுசெல்ல தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

படம்: என்டிடிவி

19 Sep 2026 - 6:44 pm

1 mins read

கௌகாத்தி: அசாம் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிலுள்ள கோயில்களுக்கு ஐந்து யானைகளைக் கொண்டுசெல்ல தடை விதிப்பதற்கு கௌகாத்தி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி அசுதோஷ் குமார், நீதிபதி அருண் தேவ் சௌத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சட்டபூர்வமான அனைத்து அனுமதிகளும் பெறப்படவில்லை என்பது நிரூபிக்கப்படாத வரை, யானைகள் மாற்றத்திற்குத் தடை விதிப்பது சாத்தியமன்று என்று நீதிமன்றம் கூறியது.

தனியார் பராமரிப்பில் உள்ள யானைகளின் நலத்தைப் பேணுவது அவசியம் என்றும் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளை எதிர்த்து ரோகித் சௌத்ரி தாக்கல் செய்த இடைக்கால மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது.

முன்னர் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட ‘ஜோய்மாலா’ யானை துன்புறுத்தப்பட்டதாக எழுந்த அச்சத்தை அசாம் மாநில அரசு ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.

யானைகளை மாற்றுவதற்குத் தேவையான அனைத்து ஒழுங்குமுறை அனுமதிகளும் முறைப்படி பெறப்பட்டுவிட்டதாக அசாம் மாநில அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக நோக்கங்களுக்காகப் பாதுகாப்பாக யானைகளைக் கொண்டுசெல்வதற்குத் தேவையான அனைத்து முக்கிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அரசு உறுதியளித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான முதன்மை மனுவும் இடைக்கால மனுவும் வரும் அக்டோபர் 15ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்
யானைஅசாம்தமிழ்நாடுஉயர் நீதிமன்றம்நீதிபதி