சென்னை: எண்ணெய்க் கசிவு குறித்த சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) அறிக்கையை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிராகரித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது மணலி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக திடீரென எண்ணெய்ப் படலம் பரவியது. அது கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம் வழியாக கடலில் கலந்தது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. எண்ணெய் படிந்ததால் பறவைகளும் பாதிக்கப்பட்டன. மேலும், குடியிருப்புச் சுவர்கள், தெருக்கள், நிலப்பரப்பில் உள்ள தாவரங்கள் மீதும் எண்ணெய் படிந்தது.
இதன் காரணமாக எண்ணூர் பகுதி மட்டுமல்லாது, பக்கிங்ஹாம் கால்வாய் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பல குடியிருப்புகளில் எண்ணெய்க் கழிவுகள் சூழ்ந்தன. இதுகுறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.
அதனைத் தொடர்ந்து, 2024 அக்டோபர் மாதம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் சிபிசிஎல் நிறுவனத்திற்கு ரூ.73.68 கோடி அபராதம் விதித்தன.
புயல் வெள்ளம் காரணமாக மணலி பகுதியில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன எனக் கூறி, ரூ. 73.68 கோடி அபராதத்தை சிபிசிஎல் நிராகரித்துள்ளது.
இது குறித்து சிபிசிஎல் நிறுவனம் தரப்பில், ‘எண்ணெய்க் கசிவு குறித்து ஐஐடி மெட்ராஸ் அறிக்கையில் தவறு உள்ளது. 517 டன் எண்ணெய் கசிந்துள்ளது என்று ஐஐடி சமர்ப்பித்த அறிக்கையை நிராகரிக்கிறோம்’ என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

