சென்னை: வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களைக் (பைக் டாக்சி) கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள தமிழகப் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை எளிதில் கடக்கவும், நீண்ட தொலைவு சென்றாலும் குறைந்த கட்டணம் போன்ற ‘பைக் டாக்சி’களின் முக்கிய அம்சங்கள் மக்களை ஈர்த்துள்ளது.
ஆனால், காப்பீடு இல்லாமல் பலரும் இருசக்கர வாகனங்களை ‘பைக் டாக்சி’களாக பயன்படுத்துவதால், விபத்து ஏற்பட்டால் அதில் பயணம் செய்வோருக்கு இழப்பீடு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ‘பைக் டாக்சி’’ ஓட்டுபவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். ‘பைக் டாக்சி’ குறித்து தமிழ்நாடு அரசு மட்டும் முடிவெடுக்க முடியாது, மத்திய அரசுடன் இணைந்துதான் முடிவெடுக்க முடியும். மத்திய அரசு இருசக்கர வாகனங்களை வாடகைக்குப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே அது இந்தியா முழுவதற்கும் பொருந்தும்.
பயணிகளின் பாதுகாப்பு முக்கியம். எனவேதான் ‘பைக் டாக்சி’யை முழுமையாக தணிக்கை செய்யச் சொல்லியுள்ளோம். வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. சிறு விபத்து ஏற்பட்டாலும் நீதிமன்றத்தில் நிவாரணம் மறுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே ‘பைக் டாக்சி’களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என ஆய்வு செய்து வருகிறோம். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் ‘பைக் டாக்சி’யை எதிர்க்கின்றனர்.
மத்திய அரசின் நடைமுறையையும் நீதிமன்ற உத்தரவையும் பின்பற்ற வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. எனவே, ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. தற்பொழுது வாகனத்தைப் பறிமுதல் செய்யும் நிலைக்கு செல்லவில்லை, அபராதம் மட்டுமே விதிக்கிறோம் விதிகளை மாற்றும் தேவை இருக்கிறது என்று கூறினார்.