தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழைப் பயிற்றுமொழியாக்க ஆக்கபூர்வ நடவடிக்கை தேவை: அன்புமணி

2 mins read
4fd77877-f49b-4d6d-a655-b2252a56c368
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தாய்மொழிக்கு எவ்வாறு முன்னுரிமை கொடுப்பது என்பதை அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களைப் பார்த்து தமிழ்நாடு கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாகவும் பயிற்றுமொழியாகவும் செயல்படுத்துவதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் ஓர் அறிக்கையின் வழி கேட்டுக் கொண்டுள்ளார்.

“தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களையும் பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகி விட்டன. ஆனால், அந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது,” என்று திரு அன்புமணி கூறியுள்ளார்.

தெலுங்கானாவில் தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான சட்டம் 2018ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த 2022-23ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முன்னைய முதல்வர் சந்திரசேகரராவ் ஆட்சியில் அச்சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. இப்போது அந்தச் சட்டத்தின்படி முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அரசு, கட்டாயத் தெலுங்கு மொழிப் பாடத்திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்கும் அரசாணை செல்லாது என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 2000ஆம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விசாரணைக்குக் கொண்டு வரவோ அல்லது தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்கி சட்டம் கொண்டு வரவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அன்புமணி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்