சென்னை: சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், சென்னை காவல்துறையினர் சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவிக்கும் ரவுடிகள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (மே 24) மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் சமூக விரோதிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மாநகர் முழுவதும் கூடுதல் ஆணையர்களின் மேற்பார்வையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளுக்கு எதிரான வேட்டை தீவிரமாகத் தொடர்கிறது.
தனிப்படையைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையின்போது 84 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 45 பேர் ஏற்கெனவே குற்றம் புரிந்தவர்கள். அவர்களிடம் இருந்து 5.25 கிலோ கஞ்சா, 3.5 மெத்தம்ஃபெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சட்ட, ஒழுங்கு விவகாரத்தில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என முதல்வர் கூறியதை மனத்திற்கொண்டு அதிரடி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனக் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.

