சென்னையில் குற்றச்செயல்கள் குறைந்தன: காவல் ஆணையர்

1 mins read
d7785f8a-a6e6-49ea-8a18-add05dcd3010
காவல் ஆணையர் அருண். - படம்: காவலர்வாய்ஸ்.காம்

சென்னை: கடந்த ஆண்டு சென்னையில் குற்றச் செயல்கள் ஓரளவு குறைந்துள்ளன. குறிப்பாக வழிப்பறி, கைப்பேசி பறிப்பு, வாகனத் திருட்டுகள் ஆகியவை வெகுவாகக் குறைந்துள்ளதாக மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023, 2024 ஆண்டுகளில் தலா 105 கொலைகள் நடந்துள்ளன என்றும், 2025ல் இந்த எண்ணிக்கை 93ஆகக் குறைந்துள்ளது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு சென்னையில் 325 வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 256 ஆகக் குறைந்த நிலையில், 2025ஆம் ஆண்டு 180 வழிப்பறிச் சம்பவங்கள் மட்டுமே பதிவாகி உள்ளன என்று திரு அருண் தெரிவித்துள்ளார்.

தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக 2023ல் 714 பேரும், 2024ல் 1,302 பேரும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், 2025ல் 1092 பேர் குண்டர் சட்டத்தில் கைதானதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான 66 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்குச் சட்ட ரீதியில் கடும் தண்டனை வாங்கித் தரப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு இணையக் குற்றங்கள் தொடர்பாக 177 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஏறக்குறைய ரூ.34 கோடி மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் காவல் துறை ஆணையர் அருண் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்