மழைநீரில் மூழ்கிய பயிர்கள்: கண்ணீரில் விவசாயிகள்

2 mins read
3e6bc663-0fa1-4332-8140-cff8cab13e83
வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாகவும் வங்கக் கடலில் உருவான புயலின் எதிரொலியாலும் நாகை முழுவதும் கடந்த சில நாள்களாகவே பலத்த மழை கொட்டித்தீர்த்தது. - படம்: ஊடகம்

நாகை: தமிழகத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 60,000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் நெற்பயிற்கள் அழுகத்தொடங்கியதை அடுத்து விவசாயிகள் தவிப்புக்கு ஆளாகி உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் 1.62 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி நடந்துள்ளது. ஏற்கெனவே வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாகவும் வங்கக் கடலில் உருவான புயலின் எதிரொலியாலும் நாகை முழுவதும் கடந்த சில நாள்களாகவே பலத்த மழை கொட்டித்தீர்த்தது. எனினும் இந்த அதிகப்படியான மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.

நாகை முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தற்போது மழை சற்று குறையத்தொடங்கியுள்ளது என்றாலும், விளைநிலங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் அழுகத்தொடங்கிவிட்டதாகக் கடை மடை பாசன விவசாயச் சங்கத் தலைவர் தமிழ் செல்வன் கூறியுள்ளார்.

ஒரு வாரமாக இதே நிலை நீடிப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், திருவாரூர், தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்து கரைபுரண்டு ஓடிவரும் வெள்ள நீரின் வடிகாலாக நாகை மாவட்டம் உள்ளது என்றும் இதனால்தான் நாகையில் மழைநீர் வடியாமல் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தேவநதியின் முகத்துவாரத்தில் நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்களால் உருவான மணல் திட்டுகளை மழைக்காலத்திற்கு முன்பே அப்புறப்படுத்தி, மழைநீர் தடையின்றி கடலில் சேர நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களின் அலட்சியத்தால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது,” என்று தமிழ் செல்வன் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்