திருவாரூர்: ஆற்றுப் பாசனமும் பருவமழையும் கைவிட்டதால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
வேதனையடைந்த திருவாரூர் மாவட்ட விவசாயக் குடும்பப் பெண்கள், வயலில் இறங்கி ஒப்பாரி வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எளவனூர் பகுதியில் பாமணி ஆற்றுப் பாசனத்தை நம்பி 5,000 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்பட்ட நீர் கடைமடை வரை முழுமையாக எட்டாததாலும், பருவமழை பொய்த்ததாலும் ஏறக்குறைய 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன.
இதனால் மனமுடைந்த விவசாயப் பெண்கள், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) எளவனூர் வயல்களில் இறங்கி ஒப்பாரிப் பாடல்களைப் பாடியும் கும்மியடித்தும் தங்களது துயரத்தை வெளிப்படுத்தினர்.
“கர்நாடகா மாநிலத்திடம் இருந்து உரிய நீரைப் பெற்றுத்தராமல் அரசு ஏமாற்றிவிட்டது. குறுவையைத் தொடர்ந்து சம்பாவும் பொய்த்துவிட்டதால், வாங்கிய கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது எனத் தெரியாமல் தவிக்கிறோம்,” என்று விவசாயி கலைவாணி இந்து தமிழ் திசை நாளிதழிடம் கூறினார்.
அரிச்சந்திரா ஆற்றில் நீர் வராததால் காரியமங்கலத்தில் கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும், மத்தியக் குழுவை வரவழைத்துப் பயிர்ச் சேதங்களை ஆய்வு செய்யவும் வலியுறுத்தி விவசாயிகள் வயலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை, சாலியமங்கலம், நல்லவன்னிகுடிகாடு, புதூர் ஆகிய பகுதிகளிலும் கல்லணை நீர் நிறுத்தப்பட்டதால் 42 நாள்களான இளம் சம்பா பயிர்கள் கருகி, விளைநிலங்கள் பாலைவனம் போல் வெடித்துக் காணப்படுகின்றன.
ஏக்கருக்கு 45,000 ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில், அதிகாரிகள் தண்ணீரையும் ஊக்கமருந்தையும் தெளிக்கச் சொல்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வேளாண் அதிகாரிகள் உரிய கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
