மதுரை: சிறைக் கைதிகள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்வதில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதாக வெளியான தகவல் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சனிக்கிழமையன்று (ஜனவரி 4) அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு முக்கியமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகச் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு விருப்பமான கைத்தொழில்களில் ஈடுபட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வகையில், மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பொருள்கள் அனைத்தும் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு மொத்த விலையில் விற்கப்படுகின்றன.
இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கு கைதிகளுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேசமயம் கைதிகள் தயாரிக்கும் பொருள்களுக்குத் தேவைப்படும் பல்வேறு மூலப்பொருள்களைச் சிறை நிர்வாகம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்வது வழக்கம்.
இந்த நடைமுறையில்தான் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது மூலப்பொருள்களைச் சந்தை விலையைவிட கூடுதல் தொகை கொடுத்து வாங்கியதாக அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர்.
அதேசமயம் கைதிகள் தயாரித்த பொருள்கள் குறைவான தொகைக்கு விலைபோனதாகக் கூறி, போலி ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரித்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர் என்பதுதான் குற்றச்சாட்டு.
அந்த வகையில், 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை சுமார் ரூ.1.63 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அப்போதைய மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன், பொருள்களை விநியோகம் செய்தவர்கள் உட்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புக் காவல் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் வீடுகள், மதுரை மத்திய சிறை உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பத்து மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடத்தினர்.
மேலும், மத்திய சிறையில் உள்ள பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். இந்த நடவடிக்கையின்போது முறைகேடு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஊடகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


