வேலூர்: தமிழக அமைச்சர் துரைமுருகனின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியில் அண்மையில் மேற்கொண்ட சோதனையில் ரூ.13.7 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 4, 5ஆம் தேதிகளில் காட்பாடியிலுள்ள கதிர் ஆனந்தின் வீட்டிலும் அவருக்குச் சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அச்சமயத்தில் கதிர் ஆனந்த் வீட்டில் இல்லை என்றும் குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், சோதனையில் கைப்பற்றப்பட்டது என்னென்ன என்பது குறித்த விவரங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கதிர் ஆனந்தின் கல்லூரியிலிருந்து ரூ.13.7 கோடியும் அவரது வீட்டின் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து ரூ.75 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், கல்லூரியிலிருந்து முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட கணினித் துணைக்கருவிகள் ஆகியவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.
மேலும், கதிர் ஆனந்தின் சொத்துகள் தொடர்பான விவரங்களைத் திரட்டி வருவதாகவும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கணினித் துணைக்கருவிகளில் உள்ள தகவல்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.