இந்தியாவில் ‘கிரிப்டோ’ நாணயத்தை சொத்தாகக் கருதலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

2 mins read
0714b424-8f13-43d6-b618-59f24c5be159
சென்னை உயர் நீதிமன்றம் மின்னிலக்க நாணயத்தை அங்கீகரிக்கும் விதமாக இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

சென்னை: ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மின்னிலக்க நாணயத்தை இந்தியச் சட்டத்தின்கீழ் ஒரு சொத்தாகக் கருதலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிரிப்டோகரன்சி தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இக்கருத்தைக் கூறினார். இதையடுத்து, கிரிப்டோகரன்சி பயன்பாடு குறித்து அனைத்துத் தரப்பினரும் மீண்டும் பேசத் தொடங்கி உள்ளனர்.

“இது சட்டபூர்வமானது அல்ல, அது அருவமானது என்றாலும், கிரிப்டோகரன்சி என்பது ஒரு சொத்துக்குரிய அத்தியாவசிய அம்சங்களைக் கொண்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“கிரிப்டோ நாணயம் என்பது ஒரு சொத்து என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது ஒரு உறுதியான சொத்து அல்ல, அது ஒரு நாணயமும் அல்ல. இருப்பினும், அது நன்மை பயக்கும் வடிவத்தில் நாம் அனுபவிக்கவும் (வைத்திருக்கவும்) கூடிய ஒரு சொத்து,” என்றார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

சென்னை உயர் நீதிமன்றம் மின்னிலக்க நாணயத்தை அங்கீகரிக்கும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

இது, இந்தியாவில் மின்னிலக்கச் சொத்துகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதில் ஒரு முக்கியப் படியாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சட்டத்தின்கீழ் நடக்கும் ஆட்சியில், கிரிப்டோ நாணயம் ஒரு மெய்நிகர் மின்னிலக்க சொத்தாகக் கருதப்படுகிறது என்றும் அது ஒரு ஊகப் பரிவர்த்தனையாகக் கருதப்படுவதில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். பயனரால் செய்யப்படும் முதலீடு கிரிப்டோ நாணயமாக மாற்றப்படுகிறது என்றார்.

“இந்த நாணயத்தைச் சேமித்து வைக்கலாம், அதைக் கொண்டு வர்த்தகம் செய்யலாம். தேவைப்பட்டால் விற்கவும் முடியும். மேலும் இது வருமான வரிச் சட்டத்தின்கீழ் இந்த நாணயம் நிர்வகிக்கப்படுகிறது,” என்றார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் மின்னிலக்க நாணயப் பயன்பாடு குறித்து மக்கள் போதுமான விவரங்களை அறிந்துள்ளனர். இந்தியாவில் இதுகுறித்த புரிதல் பரவலாக இல்லை.

அண்மைக் காலமாகத்தான் இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கிரிப்டோ நாணயம் தொடர்பான சில விளம்பரங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்