சென்னை: மலைப்பாம்புக் குட்டிகள், குரங்குக் குட்டிகள், நட்சத்திர ஆமைகள் உள்ளிட்டவற்றைப் பயணி ஒருவரின் பயணப்பைகளில் இருந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அப்பயணி இம்மாதம் 11ஆம் தேதி புதன்கிழமை தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் இருந்து சென்னைக்கு விமான நிலையத்தை அடைந்தார்.
அவர் தமது பயணப்பைகளை விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வருகைப் பகுதியில் இரண்டு பயணப்பைகள் உரிமை கோரப்படாமல் இருந்தது குறித்து சுங்க அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவித்தது.
அவ்விரு பயணப்பைகளையும் 'ஸ்கேனர்' மூலம் சோதனையிட்ட அதிகாரிகள், 45 மலைப்பாம்புக் குட்டிகள், மூன்று குரங்குக் குட்டிகள், மூன்று நட்சத்திர ஆமைகள், அரியவகையைச் சேர்ந்த எட்டுப் பாம்புகள் ஆகியவை அப்பைகளுக்குள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து, காட்டுயிர்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு, அவற்றுக்கு உணவளிக்கப்பட்டது. அதன்பிறகு, மறுநாள் வியாழக்கிழமை அவையனைத்தும் இன்னொரு விமானம் மூலமாக பேங்காக்கிற்குத் திருப்பியனுப்பப்பட்டன.
அவற்றைக் கடத்திக் கொண்டுவந்த பயணி யாரென அடையாளம் காணப்பட்டுவிட்டார். அவரை விசாரணைக்கு முன்னிலையாகும்படி சுங்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

