சென்னை: வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் அக்டோபர் 26ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு புயலாக மாறினால், அதற்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்படும்.
‘அர்னாப்’ என்ற பெயரை வங்கதேசம் வழங்கியுள்ளது. வங்க மொழியில் இதற்கு ‘கடல்’ என்று பொருள். வெள்ளிக்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
தொடர்ந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26ல் புயலாக மாறி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
