தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களைக் குறிவைக்கும் ‘ஃபெங்கல்’ புயல்

2 mins read
5a2abde4-5bfc-4eca-97c2-dffc07d1fc3a
மழை நீரில் மூழ்கியுள்ள போச்சம்பள்ளி பகுதி காவல் நிலையம். - படம்: ஊடகம்
multi-img1 of 2

தருமபுரி: கடந்த சில நாள்களாக தமிழகத்தை அச்சுறுத்தி வந்த ‘ஃபெங்கல்’ புயல், தற்போது மூன்று மாவட்டங்களைக் குறிவைத்துள்ளதாக வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மாமல்லபுரம், காரைக்கால் இடையேயான கடற்பகுதியில் புயல் கரையைக் கடந்துவிட்டாலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

டிசம்பர் 1ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் காரணமாக கனமழை கொட்டித் தீர்ந்தது.

கடந்த சில நாள்களில் மட்டும் திருவண்ணாமலையில் ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 370 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் மண்ணுக்குள் புதைந்த நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ‘ஃபெங்கல்’ புயல் தற்போது தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை நோக்கி நகரத் தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு நிபுணரான ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதன் எதிரொலியாக அம்மாவட்டங்களில் பெருமழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. ஊத்தங்கரைப் பகுதியில் 50 செ.மீ. மழை பதிவானதாகவும் இதனால் ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்காடானாதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாம்பாறு அணையில் இருந்து நொடிக்கு 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பரசனேரி நிரம்பியதையடுத்து வெளியேறிய உபரிநீரால், ஏரிக் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், வீடுகளைவிட்டு வெளியேற முடியவில்லை என்றும் பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்