சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்குள் வங்கக்கடலில் மோன்தா புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் எச்சரித்துள்ளார்.
கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சிறப்புச் செயல்திட்டத்துடன் தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரி ஏனாமில் திங்கட்கிழமை, 27ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவிற்குள் புயல் கரையை கடக்கும் என்பதால், அதன் தாக்கம் வட தமிழகத்திலும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆந்திராவை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்க்கும். மோன்தா புயலை ஒட்டி வட தமிழகத்திற்கும் எச்சரிகை விடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
எனவே அந்த மாவட்டங்களில் ஒரு நாள் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


