சென்னை: அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டைவிட இந்தாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 விழுக்காடு குறைந்துள்ளன.
வன்கொடுமைக்கு ஆளாகும் பகுதிகள் 2021ல் 445லிருந்து 2024ல் 368ஆகக் குறைந்துவிட்டது.
இது 19 விழுக்காடு சரிவு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் சனிக்கிழமை (மார்ச் 29) முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர், “சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையைக் கடைப்பிடிக்கும் கிராமங்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.
“அதற்காக, சிறந்த 10 கிராமங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் ரூபாய் வீதம் கடந்த நான்கு ஆண்டுகளில் 259 கிராமங்களுக்கு 25 கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு உள்ளது,” என்றார்.
ஸ்டாலின் மேலும் கூறுகையில், “மாநிலம் முழுவதிலும், நான்கு ஆண்டுகளில், சமூகநீதி மற்றும் சமத்துவ சிந்தனைகள் குறித்து 6,977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன.
“அவற்றில், கடந்தாண்டு மட்டும் மூன்றாயிரத்து 794 விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6 விழுக்காடு குறைந்துள்ளன,” என்றார் அவர்.

