உருவாகிறது ‘டாணா’ புயல்: தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை

உருவாகிறது ‘டாணா’ புயல்: தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை

1 mins read
40cf18b6-6f42-4d26-93b5-787f3426181f
அந்தமான் கடற்பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்திருந்தது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: வடதமிழக வான் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் திங்கள், வியாழக்கிழமை (அக்டோபர் 21, 24) ஆகிய தினங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

23, 25ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அம்மையம் கணித்துள்ளது.

அந்தமான் கடற்பகுதியில் திங்கட்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வடமேற்குத் திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றாலும், இதன் தாக்கம் குறித்து இப்போதே ஏதும் கணிக்க இயலாது என வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இன்று கோவை, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதற்கிடையே, வங்கக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு ‘டாணா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பெயரை கத்தார் நாடு தேர்வு செய்துள்ளது.

இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்தவிதப் பாதிப்பும் இருக்காது என்றும் சில இடங்களில் மட்டுமே கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்