சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் நகை உருக்கும் கடைக்குள் புகுந்து ஒன்றரை கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிய மூன்று இளையர்களைக் காவலர்கள் அதிரடியாகக் கைது செய்து, நகைகளையும் முழுமையாக மீட்டுள்ளனர்.
பாரிமுனை பிரகாசம் சாலைப் பகுதியைச் சேர்ந்த அங்கித் திலீப் மோர் (26) என்பவர், சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தங்கம், வெள்ளி நகைகளை உருக்கும் கடையை நடத்தி வருகிறார்.
அத்துடன், அவர் தங்க நகைகளின் தரத்தை ஆய்வு செய்யும் வேலையிலும் ஈடுபடுபவர்.
புதன்கிழமை இரவு இவர் கடையில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்து வந்த மூவர் கொண்ட கும்பல் திடீரென அங்கித்தைத் தாக்கிவிட்டு, கடையிலிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பியோடியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அங்கித், சத்தம் போடவே பக்கத்துக் கடையிலிருந்தவர்களின் உதவியுடன் தப்பியோடிய கொள்ளையர்களை அவர்கள் விரட்டிச் சென்றார். இதில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
மற்ற இருவர் நகைகளுடன் தப்பினர். பிடிபட்ட இளையர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
காவலர்கள் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற அருண் (22) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில், தப்பியோடிய கூட்டாளிகள் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (23), ஹேராம் என்ற ரமணா (24) என்பதும், அவர்கள் வண்ணாரப்பேட்டை பழைய கல்லறைச் சாலையில் பதுங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், லோகேஷையும் ரமணாவையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன.

