அன்றுதான் உண்மையான சமூகநீதி நாள்: ராமதாஸ்

அன்றுதான் உண்மையான சமூகநீதி நாள்: ராமதாஸ்

2 mins read
85e6163c-f74a-4ef6-8971-95cf3c00b6a2
பாமக நிறுவனர் ராமதாஸ். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள்தான் உண்மையான சமூகநீதி நாள் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அந்த இலக்கை அடைய பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக உழைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான 1070 என்ற எண் கொண்ட சமூக அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் தலைமையிலான அரசில், கல்வித்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அவர்களால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் இன்று (நவம்பர் 4). தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதி நிலைநிறுத்தப்பட்ட நாளில் அதற்கு காரணமானவர்களை போற்றுவோம், நன்றி கூறுவோம்.

“104 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, 97 ஆண்டுகளுக்கு முன் இடப்பங்கீட்டை சாத்தியமாக்கிய இந்த சமூகநீதி மண்ணில் தான் இன்று சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. சுயநலத்தாலும், அக்கறையின்மையாலும் அந்த முயற்சிக்கு தமிழக அரசும் துணை போய்க்கொண்டிருக்கிறது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 950 நாட்கள் ஆகும் நிலையில் அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் தொடங்கி சில மாதங்களுக்கு முன்பு வரை 50 தடவைக்கும் மேல் இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்படும் என்று கூறி வந்த திமுக அரசு, திடீரென ஒரு நாள் நாங்களாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது; மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி, உழைக்கும் பாட்டாளி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது.

“இந்த நிலையில் தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள்,” என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்