மது போதையில் மரம் ஏறிய காவலர் விழுந்து உயிரிழப்பு

1 mins read
98433f33-05c7-4a01-8eca-762c2a43dd8b
மது போதையில் மரம் ஏறி, கீழே விழுந்து மரணமடைந்த காவலர் செல்வகுமரன். - படம்: ஊடகம்

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வகுமரன். வயது 30. சென்னை செம்பியம் காவல் நிலைய முதல்நிலை காவலர்.

இவரது அண்ணன் பெருமாள்ராஜ் கே.கே. நகரில் வசிக்கிறார். இவர் மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிகிறார். அண்ணன் வீட்டில் ஓராண்டாக தங்கியிருந்த செல்வகுமரன், கடந்த 19 முதல் 30ஆம் தேதி வரை, மருத்துவ விடுப்பு எடுத்திருந்தார்.

வெள்ளிக்கிழமை இரவு, மது போதையில் வீட்டிற்கு சென்ற அவர் தனக்கு திருமணம் செய்து வைக்காதது குறித்து, அண்ணனிடம் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது, வீட்டில் இருந்த பொருள்களை உடைத்ததுடன், அண்ணன் பெருமாள்ராஜை அறையில் வைத்து பூட்டினார்.

இதையடுத்து, பெருமாள்ராஜ், கே.கே., நகர் காவலருக்குத் தகவல் அளித்தார். அவர்கள் வந்து, செல்வகுமரனிடம் சமாதானம் பேசி, பெருமாள்ராஜை அறையில் இருந்து மீட்டனர்.

பின் செல்வகுமரன், மற்றொரு அறை வழியாக, பின்புறக் கதவை திறந்து வெளியே சென்று போதையில் அங்கிருந்த மரம் மீது ஏறியபோது, அதிலிருந்து தவறி விழுந்ததில், கீழே இருந்த தடுப்புச் சுவரின் கம்பி, அவரது ஆசனவாயில் குத்தி ரத்தம் கொட்டியது.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு, கே.கே., நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் பரிசோதனையில், செல்வகுமரன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. கே.கே., நகர் காவலர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்