போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற இளம்பெண் மரணம்: குழந்தை பிறந்த 20 நாளில் சோகம்

போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற இளம்பெண் மரணம்: குழந்தை பிறந்த 20 நாளில் சோகம்

படம்: தமிழக ஊடகம்

21 Nov 2024 - 7:20 pm

2 mins read

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகில் உள்ள கவுஞ்சி ராஜபுரத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ் (வயது 30), விவசாயக் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (24). இவர்களுக்கு ஏற்கெனவே 2 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கருவுற்ற பிரியதர்ஷினி கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 20 நாள்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர் வீடு திரும்பினார்.

சில நாள்களிலேயே பிரியதர்ஷினிக்கு வயிற்றுவலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்குச் சென்றார். அவருக்கு மருந்து மாத்திரைகளைப் பிரின்ஸ் வழங்கி உள்ளார். இவர் முறையான மருத்துவம் படிக்காமல் தனது வீட்டிலேயே மருந்தகம் போல நடத்தி அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே பிரின்ஸிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் வலி குறைவதற்காக அதிக வீரியம் கொண்ட ஊசியை அவருக்குச் செலுத்தினார். சற்று நேரத்தில் பிரியதர்ஷினிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு வந்தபோது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கொடைக்கனால் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த பிரின்சைத் தேடி வருகின்றனர். அவர் முறையான மருத்துவம் படிக்காமல் பல வருடங்களாகக் கிராம மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். தற்போது அவரது சிகிச்சையால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு காவல்துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

போலி மருத்துவர்கள் கொடைக்கானல் மலைக் கிராமங்களில் இதுபோல் பல்வேறு இடங்களில் மருந்தகம் வைத்து செயல்படுகின்றனர். அரசு மருத்துவமனைக்கு நீண்ட தூரம் செல்லவேண்டும் என்பதால் அருகில் கிடைக்கும் மருத்துவத்தை அப்பகுதி கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களுக்கு ஒருசில மருத்துவர்களும் உதவி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, கொடைக்கானல் மலைக் கிராமங்களில் போலி மருத்துவர்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்