உதயநிதி ஸ்டாலினுக்குக் கொலை மிரட்டல்

உதயநிதி ஸ்டாலினுக்குக் கொலை மிரட்டல்

படம்: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக இணையத்தளம்

15 Nov 2025 - 1:21 pm

1 mins read

சென்னை: காவல்துறை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக தினமும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

“தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மகன் இன்பநிதி ஆகிய இருவரையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

“இதற்காக கொலையாளிகளை வேலைக்கு அமர்த்தி உள்ளோம்.

“இதைத் தவிர்க்கவேண்டும் என்றால் ரூ.10 கோடி கொடுக்க வேண்டும்,” என்று அந்த மிரட்டலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மிரட்டலைக் கண்ட காவல்துறையினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இந்த மிரட்டல் கடிதம் தீவிரவாத தடுப்புப் பிரிவுக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை நடந்து வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோல் திரைப்பட இயக்குநர் சங்கர், நடன இயக்குநர் கலா, நடிகர் பிரசாந்தின் தந்தையும் மூத்த நடிகருமான தியாகராஜன் ஆகியோரின் வீடுகளுக்கும் மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்