விருதுநகர்: தமிழ் நாட்டின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஆனால், மெட்ரோ போன்ற மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் மட்டுமே தமிழக அரசுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இருப்பினும் தமிழக அரசு, நிதிக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை மீறாமல்தான் கடன்பெற்றுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் நாடு அரசு திவாலாகிறது என்று அண்மையில் கூறியிருந்தார். அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவரின் குற்றச்சாட்டு வேடிக்கையானது. நிதி மேலாண்மையில் தமிழ் நாடு அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் திரு தங்கம் கூறினார்.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசே ஒதுக்கியது.
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இவ்வாறாக, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததாலேயே மாநில அரசுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.
இருப்பினும், தமிழக அரசு நிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஒவ்வோர் நிதியாண்டும் நிதிக்குழு பரிந்துரைக்கும் அளவைக் காட்டிலும் குறைவாகவே தமிழ் நாடு அரசு கடன் பெறுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
‘நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு பரந்தூர் விமானம் நிலையம் அவசியம்’
பரந்தூர் விமான நிலையம் நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்றும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலையம் மட்டும் போதாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
“எதிர்கால போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு உட்கட்டமைப்பு தேவைகள் அவசியமாகின்றன. மேலும், தொழிற்புரட்சிக்கு வித்திடும் ஒன்றாக பரந்தூர் விமான நிலையம் இருக்கும்,” என்றார் அமைச்சர்.
பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய் அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து அரசுக்குத் தெரிவிக்கலாம் எனவும் போராடும் மக்களை ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் சந்திக்க அனுமதி வழங்கப்படுமெனவும் அவர் சொன்னார்.