தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குவா... குவா... குறையும் பிறப்பு - உலகம் திகைப்பு

3 mins read
5b18d117-b592-4cb1-997c-d26c8799af15
நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி என்பது 0.92 விழுக்காடாக உள்ளது. இதில் சில மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது தேசிய அளவான 0.92 விழுக்காட்டைவிடக் கூடுதலாக உள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 2

திருமணமான இளம் தம்பதிகள் காலாகாலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால், பிரச்சினை வீட்டில் மட்டுமல்ல, நாட்டிலும் ஏற்படும். ஏனெனில் வீடுதானே நாடு.

உலகில் பெரும்பாலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது நாளை பெரும் பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பின் ஓர் அங்கமான ‘SRS’ எனப்படும் ‘சாம்பில் ரெஜிஸ்டிரேஷன் சர்வே’ (Sample Registration Survey), 2021- தரவுகளின் அடிப்படையில், இந்திய மாநிலங்களின் பிறப்பு விகிதத்தை வெளியிட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை வளர்ச்சி என்பது 0.92 விழுக்காடாக உள்ளது. இதில் சில மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது தேசிய அளவான 0.92 விழுக்காட்டை விடக் கூடுதலாக உள்ளது.

குழந்தை பிறப்பு விகிதம்:

பீகார் 1.98%

உத்தரப் பிரதேசம் 1.70%

மேகாலயா 1.5%

மத்தியப் பிரதேசம் 1.495

இப்படி உள்ளது பிறப்பு விழுக்காடு.

அதேசமயம், சில மாநிலங்களில் தேசிய விகிதத்தைவிடக் குறைவான மக்கள் தொகை வளர்ச்சியில் உள்ளது. வரும் காலங்களில் நிலைமை எப்படி இருக்குமோ!

மகாராஷ்டிரம் 0.71%

மேற்கு வங்கம் 0.78%

தெலுங்கானா 0.74%

கர்நாடகா 0.68%

ஆந்திரா 0.61%

குழந்தைப் பிறப்பு, மக்கள் தொகை வளர்ச்சியில் இந்திய அளவில் பார்க்கும்போது தமிழகம் 0.30%, கேரளா 0.22% என மிக மோசமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் குழந்தைப் பிறப்பு விகிதம் 11 விழுக்காடு சரிந்திருப்பது கவலையுறச் செய்கிறது.

2019: 9,45,701 குழந்தைகள் பிறந்தன.

2020இல் 9,39,783, 2021ல் 9,12,864, 2022ல் 9,36,367 குழந்தைகள், 2023ல் 9,20,306, 2024ல் 8,41,821 குழந்தைகள் பிறந்தன.

- இப்படி தமிழகத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் மிக மோசமான சரிவில் உள்ளது.

கடந்த 24.3.2025 அன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் குழந்தை இறப்பு விகித அறிக்கையில் (UN IGME - 2024) இந்திய அரசைப் பாராட்டியுள்ளது.

பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை தகுந்த மருத்துவ வசதிகளால் தடுத்திருக்கிறது இந்தியா.

உலக அளவில் குழந்தை இறப்பு தடுப்பு விகிதம் 58% எனில் இந்தியாவில் குழந்தை இறப்பு தடுப்பு விகிதம் 71%.

இதனால் தேசிய மக்கள் தொகை வளர்ச்சியில் இந்தியா மிகவும் அடிபடாமல் இருக்கிறது. இருப்பினும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு இது போதுமானதல்ல.

குழந்தை பிறப்பு, மக்கள் தொகை வளர்ச்சி சரிவால் உலகமே பாதிப்புக்கு ஆளாகக்கூடும்.

தேசிய வளர்ச்சியில் இன்னும் சில ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை விஞ்சிவிடும் இந்தியா. ஏனெனில் சீனாவிலும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே, குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு இளம் தம்பதிகளிடம் வலியுறுத்துகிறது.

ஜப்பான் நாடு குழந்தைப் பிறப்பு, மக்கள் தொகை வளர்ச்சியில் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இப்போதே ஜப்பானில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகம்தான். இதனால் கர்ப்ப கால மானியம், பிரசவக் கால மானியம், குழந்தைப் பராமரிப்பு மானியம் உள்ளிட்ட மானியங்களின் தொகையை ஜப்பான் அரசு உயர்த்தியுள்ளது. இருப்பினும் முன்னேற்றம் இல்லை.

இதே நிலை நீடித்தால், சுறுசுறுப்பிற்குப் பெயர்போன ஜப்பான், நாளை சோம்பேறித்தனத்திற்குப் பெயர்போன நாடாகக்கூடும். இதனால் உஷாரான ஜப்பான் அரசு, ஓர் ஒப்பந்தத்தை இந்தியாவிடம் போட்டுள்ளது.

ஜப்பானில் பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாக சரிந்து வரும் நிலையில், தொழில்துறை திறன் பயிற்சி பெற்ற வல்லுநர்களின் தேவை அதிகம் உள்ளது. அதனால் இந்தியாவில் இருந்து பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்ற இந்திய வல்லுநர்களை ஜப்பானில் பணியாற்ற அனுப்பி வைக்கிறது இந்தியா.

பிறப்பு விகிதம், மக்கள் தொகை வளர்ச்சி குறைவதால் என்ன நடக்கும் என்றால், வீட்டில் இருக்கும் ஓரிரு முதியவர்களை பராமரிப்பதே கஷ்டம் எனும்போது, நாட்டில் உள்ள லட்சக்கணக்கான முதியவர்களைப் பராமரிப்பது அரசுக்கு சிரமமாகக்கூடும்.

இளையர்கள் எண்ணிக்கை குறையும்போது, வருமான வரி மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் குறையும். நாட்டின் பொருளியல் மிக மோசமாக ஆகிவிடும்.

இளையர்கள் குறைவாக உள்ள நாட்டைப் பிற நாடுகள் அச்சுறுத்தும் நிலையும் ஏற்படும்.

பெண்களுக்கான கல்வி உரிமை, சம உரிமை, வேலை வாய்ப்பு, பணப்புழக்கம் ஆகியவை அதிகரிப்பதால் குழந்தைப் பிறப்பை பெண்கள் தள்ளிப் போடுகிறார்கள். அது தள்ளியே போய்விடுகிறது.

உங்களுக்குப் பிறக்கும் குழந்தை உங்களுக்கல்ல, இந்த உலகத்திற்கு ஏதோ ஒன்றைச் செய்யும் நோக்கத்துடன் படைக்கப்பட்டது. - இப்படியோர் பொன்மொழி உண்டு.

தான் பிறந்த தேசத்திற்கு குழந்தையைத் தர வேண்டியது தங்களின் கடமை என்பதை இளம் தம்பதிகள் உணர வேண்டும்.

குறிப்புச் சொற்கள்