தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் கடந்த 16ஆம் தேதி முதலே சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பேருந்து, ரயில்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் புறப்பட்டுச் செல்கின்றனர்.
சென்னைவாசிகள் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்வதை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் 20 ஆயிரத்து 378 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து கடந்த 3 நாட்களாக இயக்கப்பட்ட பேருந்துகளில் 6,15,992 பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (அக்டோபர் 18) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,834 சிறப்புப் பேருந்து என மொத்தம் 4,926 பேருந்துகள்மூலம் 2,56,152 பயணிகள் பயணம் செய்துள்ளதாகப் போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது தவிர சென்னையிலிருந்து சனிக்கிழமை புறப்பட்ட தென்மாவட்ட ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதே போன்று, சென்னை சென்ட்ரலிலிருந்து இயக்கப்படும் ரயில்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே தீபாவளியைக் கொண்டாட சென்னையிலிருந்து இதுவரை 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி 9.5 லட்சம் பேர் சிறப்பு ரயில்கள் மூலமும், 6.15 லட்சம் பேர் அரசுப் பேருந்துகள் மூலமும், ஆம்னி பேருந்துகளில் 2 லட்சம் பேர் வரையிலும், 1.5 லட்சம் பேர் வாகனங்கள் மூலமும் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு சென்றுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

