சென்னை: அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் காரணங்கள் நியாயமானவை என நீதிமன்றம் கருதினால், தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய சென்னை எம்பி-யான தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை பழனிசாமி கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது தொகுதி நிதியில் 95 விழுக்காட்டைப் பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு பட்டியலையும் வெளியிட்டிருந்தார்.
இந்த அவதூறு வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த முறை நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பழனிசாமி நேரில் முன்னிலையானார். தொடர்ந்து, நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்கக் கோரி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமை (செப். 19) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பழனிசாமியின் மனுவுக்கு திமுக எம்பி-யான தயாநிதி மாறன் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் வயது மூப்பு மற்றும் மருத்துவ காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவரது கோரிக்கை நியாயமானது தான் என நீதிமன்றம் கருதினால், முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் செப்.25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.