கரூர்: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அரசியல் தலைவருமான கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமான்மீது அவதூறாகப் பேசுதல், இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசி இணையத் தளத்தில் வெளியிடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் விக்கிரவாண்டியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்தது. அப்போது நடந்த பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் காலஞ்சென்ற கருணாநிதி குறித்து அவதூறாகப் பாடல் பாடினார். இதுகுறித்து திருச்சி மாவட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சாட்டை துரைமுருகன் பாடிய பாடலைச் சீமானும் பாடி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கடந்த ஆகஸ்ட் மாதம் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். கடந்த அக்டோபர் மாதம் இவ்வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி சீமான் மீது தாந்தோணிமலை காவல் நிலையம் வியாழக்கிழமை (நவம்பர் 7) நடவடிக்கை எடுத்தது.

