கல்பாக்கம்: டெல்லி கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்திற்கு நான்கு அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் சென்னை அணுமின் நிலையம் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் அணுமின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
திங்கட்கிழமை (நவம்பர் 10 இரவு டெல்லியில் கார் குண்டு வெடித்து பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்) தீவிரப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அணுமின் நிலையங்களுக்குச் செல்லும் நுழைவு வாயில் பகுதியில் தமிழகக் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அணுமின் நிலையங்களுக்குச் சுழற்சி முறையில் பணிக்குச் செல்லும் மத்திய அரசின் ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகியோர் சிஐஎஸ்எஃப் படையினரின் தீவிரச் சோதனைகளுக்குப் பிறகே அணுமின் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். வாகனங்களும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
அணுமின் நிலையங்கள் நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைப் படைத் தாக்குதல்
இதற்கிடையே, டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என புதுடெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜம்மு, காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளுக்கு மிரட்டல் விடுத்து, சுவரொட்டி ஒட்டிய டாக்டர் அடில் அகமது கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிபொருள்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் ஃபரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலைக் கழகத்தில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீல் கைது செய்யப்பட்டார்.
அவரின் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.
இவை தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு டெல்லியில் குண்டு வெடித்தது.

