புதுடெல்லி: பாட்டாளி மக்கள் கட்சிக்கு யார் தலைவர் என்பதில் கட்சி நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பாமகவுக்கு அன்புமணிதான் தலைவர் என்றும் அக்கட்சியும் அதன் சின்னமும் அன்புமணிக்கே சொந்தமானவை என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. கட்சியில் பிரச்சினை எழுந்த பின்னர் ஆவணங்கள் அடிப்படையில் முடிவெடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்சியில் சிக்கல் ஏற்படுவதற்கு முன்பு அளிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் அங்கீகரிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு வரை பாமக தலைவராக அன்புமணி நீடிக்க முடியும் என்பதால், அளிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவர்தான் பாமகவின் தலைவர் என தீர்மானித்து அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனவே, கட்சியின் சின்னமும் அவருக்குத்தான் சொந்தம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் மனுவை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம் பாமக வழக்கு தொடர்பான எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.
இதன்மூலம் பாமகவும் அதன் சின்னமும் அன்புமணிக்குத்தான் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக அரசியல் கவனிப்பார்கள் கூறுகின்றனர்.
மேலும், பாமக நிறுவனர் ராமதாசுக்கு அரசியல் களத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
பாமகவும் அதன் மாம்பழச் சின்னமும் அன்புமணி வசம் சென்றுவிட்ட நிலையில், ‘அய்யா பாமக’ என்ற புதுக்கட்சியைத் தொடங்கியுள்ளார் மருத்துவர் ராமதாஸ்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, சென்னையில் நடைபெற்ற பாமக இளையரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி, பாமகவில் தற்போது நிலவும் குழப்பங்களுக்கு திமுகதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டினார்.

