தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக எம்பிக்களுடன் பிரதமரைச் சந்திக்க முடிவு: ஸ்டாலின்

2 mins read
355e8095-40ff-4657-a83e-f7ea82e9567d
படம்: - தமிழக ஊடகம்

சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, தமிழக எம்பிக்கள் குழுவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் மார்ச் 24ஆம் தேதி பேசிய அவர், உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், இதை வலியுறுத்தியே தொகுதி மறுவரையறைக்கு எதிராக, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் இதுதொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வட மாநிலங்களில் எந்த விகிதத்தில் தொகுதிகள் மறுவரையறைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும் என்றார் ஸ்டாலின்.

தொகுதி மறுவரையறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாடு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்றார்.

“எனவே, 2026ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு, தற்போது இருக்கும் தொகுதி வரையறையை நீட்டிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும். அரசியலமைப்பில் அதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

“தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று, தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறோம்,” என்று ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்