சென்னை: தமிழகத்தில் டெங்கி காய்ச்சலுடன், சளிக்காய்ச்சலும் பரவி வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு மாநிலச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக பொதுச் சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியபோது, “அண்மைக்காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
“இன்ஃப்ளூயன்ஸா என்ற சளிக்காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. இதைத் தவிர, நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளது,” என்று தெரிவித்தார்
“இருமல், தொண்டை ஒவ்வாமை, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியார் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
“மருத்துவத்துறையினா், சுகாதாரக் களப்பணியாளா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்றடுக்கு முகக்கவசங்களை அணியலாம்,” என்றும் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தி இருக்கிறார்.

