தென்காசி: இந்தியாவில் முதல்முறையாக டெங்கிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
ஜப்பானின் ‘தக்கேடா’ (Takeda) நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனமும் இந்திய மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளன.
மூன்று மாத இடைவெளியில் இரு தவணைகளாக இந்தத் தடுப்பூசியைச் செலுத்துவதன்மூலம், டெங்கிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து 80 முதல் 90 விழுக்காடு வரை முழுப் பாதுகாப்பு பெற முடியும் என்பதை மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
இங்கிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் கடையநல்லூர் பகுதியில் டெங்கிக் காய்ச்சலால் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகமாகப் பதிவானதால், முதற்கட்டமாக அங்கு டெங்கித் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கள ஆய்வு தொடங்கப்படுகிறது.
இதற்காக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தேசியத் தொற்று நோயியல் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்நிறுவன விஞ்ஞானிகள் தலைமையில் தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்புக் குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 20 அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில், விரைவில் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசி செலுத்துவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் அருண்ராஜ் உறுதி அளித்தார்.
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு டெங்கித் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதுவரை எந்த மாநிலமும் அதை மக்களுக்குப் பயன்படுத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை.
நாட்டில் முதன்முறையாகத் தமிழகத்தில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
