ஹைதராபாத்: தாமதமாக வந்து விமானத்தைத் தவறவிட்ட ஆத்திரத்தில் ராணுவப் பொறியாளர் ஒருவர் தாம் செல்லவிருந்த ஹைதராபாத்-சென்னை விமானத்தில் வெடிகுண்டில் இருப்பதாகத் தொலைபேசிவழி பொய் மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, அவர் ஹைதராபாத் ராஜீவ் காந்தி அனைத்துலக விமானக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலம், வாராங்கல் நகரைச் சேர்ந்த அஜ்மீர் பத்ரய்யா, 59, சென்னையில் உள்ள ராணுவப் பொறியியல் சேவைகள் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து விமானம் வழியாக சென்னை செல்ல அவர் பயணச்சீட்டு வாங்கியிருந்தார். ஆனால், அவ்விமானத்தை அவர் தவறவிட்டுவிட்டார்.
இதனையடுத்து, காலை 10.15 மணிக்கு இண்டிகோ விமானத்திற்கு முன்பதிவு செய்தார். ஆனால், அவ்விமானத்தையும் அவரால் பிடிக்க முடியவில்லை. அவர் விமான நிலையத்திற்குச் சென்றபோது, விமானத்தில் ஏறுவதற்கான 'போர்டிங் கேட்' மூடப்பட்டுவிட்டது.
இதனால் வெறுத்துப்போன பத்ரய்யா, தன்னை விட்டுவிட்டு விமானம் கிளம்ப முடியாது என மிரட்டியதாகவும் சற்று நேரத்தில் அவசர அழைப்பு எண்ணான 100ஐத் தொடர்புகொண்டு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் கூறியதாக காவல்துறை ஆய்வாளர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டது. விமான நிலையத்திலேயே இருந்த பத்ரய்யாவை விசாரித்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அவர் ஒத்துக்கொண்டார்.


