தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சேலையில் சிகரம் ஏறி சாதித்த சென்னை மருத்துவர்

2 mins read
17e0cbdc-b612-4fd2-8c13-5f1f2e889e6b
கிளிமஞ்சாரோ சிகரத்தின் உச்சியில் மருத்துவர் இசா. - படம்: ஊடகம்

ஆப்பிரிக்காவின் ஆகப்பெரிய கிளிமஞ்சாரோ சிகரத்தை, சேலையில் அடைந்து சாதனை படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவரான இசா பாத்திமா ஜாஸ்மின்.

சாகசங்கள் புரிவதில் ஆர்வமுள்ள இசா, மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்தியப் பாரம்பரியத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், தமது சாதனைத் தருணத்தின்போது சேலை அணிந்திருந்தார்.

கிளிமஞ்சாரோ சிகரத்திற்கான மலையேற்றம் ஆறு நாள்கள் நீடித்தது. பெரும்பாலான நேரம் பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலையை எதிர்த்து இசா போராட வேண்டியிருந்தது. இதற்காக ஏழு அடுக்கு டிராக் கால்சட்டை, வெப்ப மேலாடைகளை அணிந்து சமாளித்துள்ளார்.

“மலையேற்றத்துக்கான உடைகளை தேர்வு செய்தபோது, சேலையையும் கவனமாகத் தேர்வு செய்தேன். ஆனால் அதைப் பயன்படுத்த முடியுமா என்பது அப்போது உறுதியாகத் தெரியாது. எனினும் சிகரத்தின் உச்சியை அடைந்தபோது, பாரம்பரியம், வலிமை இரண்டில் எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கவில்லை. ஏனெனில் நான் இரண்டையுமே கொண்டு சென்றிருந்தேன். அவை இரண்டுமே அந்த இடத்துக்கு உரியவை,” என்று கூறினார் இசா.

“உடை என்பது எதற்கும் தடையாக இருக்க முடியாது. சவால்களை எதிர்கொள்வதில் பாரம்பரியமும் வலிமையும் கைகோக்க முடியும் என்பதையும் எனது சாதனை நிரூபித்துள்ளது,” என்றார் இசா.

கடல் மட்டத்தில் இருந்து 19,341 அடி உயரத்தை அடைந்த பின்னர் அங்கு ‘புஷ் அப்’ எனப்படும் உடற்பயிற்சி நடவடிக்கையிலும் இசா ஈடுபட்டார்.

“முதலில் இதற்கு நான் திட்டமிடவில்லை. மலையேற்ற வீரரை மட்டுமல்லாமல், அதாவது பாரம்பரியத்தால் வடிவமைக்கப்பட்ட பெண்ணையும் என்னோடு உச்சிக்கு அழைத்துச் செல்ல விரும்பினேன். அதனால்தான் புடவை அணிந்தேன்.

“வலிமை என்பது கடினமான, சத்தமானது, கவசம் போன்றது என்று உருவகப்படுத்துகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அமைதியாகவும் வேரூன்றியிருப்பதும் கூட வலிமைதான். வலிமை என்பது நீங்கள் எதை அணிகிறீர்கள் என்பதல்ல, அது நீங்கள் யார் என்பதுதான்,” என்றார் இசா.

டாக்டர் இசா, ஏற்கெனவே எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கான அடிப்படை பயிற்சியையும் முடித்துள்ளார். அதற்கு முன்பாக, கிளிமஞ்சாரோவை தேர்ந்தெடுக்கக் காரணம் அதன் அமைதிதான் என்றார்.

குறிப்புச் சொற்கள்