தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது: உயா் நீதிமன்றம்

2 mins read
08fdca70-fba0-41b3-9a5d-145af76e152f
கோப்புப் படம் - பிக்சாபே

சென்னை: கர்ப்பிணிப் பெண்ணின் மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க மறுத்தது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பை இம்மாதம் (செப்டம்பர்) 4ஆம் தேதி முதல் வழங்க வேண்டும் என உளுந்தூா்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக ரஞ்சிதா என்பவர் பணியாற்றுகிறார்.

அவர், தனது மூன்றாவது பிரசவத்துக்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கக் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முன்சீப் நீதிமன்ற நீதிபதியிடம் மனு அளித்தார்.

ஆனால், அம்மனுவை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தனக்கான சலுகைகளை வழங்க மறுப்பது குறித்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ரஞ்சிதா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஹேமந்த் சந்தன்கவுடா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ரஞ்சிதாவுக்கு இந்தப் பணியில் சேர்வதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது மூன்றாவது முறையாகக் கர்ப்பிணியாக உள்ளார்.

இதுபோன்ற சூழலில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், குழந்தை பிறப்பதற்கு முன்பும் பின்பும் வலிகளை அனுபவிக்கும் கா்ப்பிணிகளுக்கு ஆதரவாகவே இந்த மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

இந்தச் சூழலில், ரஞ்சிதாவுக்கான மகப்பேறு விடுப்பை வழங்க மறுத்தது நியாயமற்றது. அவருக்கான விடுப்பை செப்டம்பர் 4ஆம் தேதி முதல் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்