சென்னை: தமிழகத்தில் கோடைக்காலத்தில் திடீரென ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்யும்படியும் அதுகுறித்த விவரங்களை அரசுக்குத் தெரியப்படுத்தும்படியும் அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்குப் பொதுச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
“அடுத்து வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் கடுமையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
“இந்தக் காலகட்டத்தில் நேரடியாக வெயிலில் பணியாற்றுவோா் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.
“குறிப்பாக சாலையோர வியாபாரிகள், கட்டடத் தொழிலாளா்கள், நூறு நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளா்கள், சுரங்கத் தொழிலாளா்கள், பேருந்து நடத்துநா், ஓட்டுநா்கள் உள்ளிட்டோர் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.
“அதுமட்டுமன்றி விவசாயிகள், உணவு விநியோகப் பணியில் ஈடுபடுபவர்கள், காவல்துறையினா், தீயணைப்புப் பணியாளா்கள், போக்குவரத்துக் காவலர்கள், சாலையோரம் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்போர் உள்ளிட்டோரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்.
“குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், இணை நோயாளிகள் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
“வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் தண்ணீா் அருந்துவது முக்கியம். உப்பு-சா்க்கரை கரைசலும் தேவைப்படும்போது பருகலாம்,” என்றாா் அவா்.

