வெறிச்சோடிய சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற 19 லட்சம் பேர்

1 mins read
a2fec5b4-505e-48a9-8fd2-04a98d396f9a
பொங்கலையொட்டி 5 நாள்கள் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றனர். - படம்: கல்கி ஆன்லைன்

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதை அடுத்து சென்னையில் இருந்து 19 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றதால் சென்னை மாநகரச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இம்முறை பொங்கலையொட்டி 5 நாள்கள் விடுமுறை வருகிறது. இதையடுத்து, சிறப்பு ரயில்களும் பேருந்துகளும் இயக்கப்பட்டன. கடந்த நான்கு நாள்களில் மட்டும் அரசுப் பேருந்துகளில் ஏறக்குறைய 11 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்தது.

கடந்த 9ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மொத்தம் 15,762 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதே போல் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் சென்ற சிறப்பு ரயில்கள் நிரம்பி வழிந்தன.

புதன்கிழமை மட்டும் 1.50 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாகவும், ஐந்து நாள்களில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தனியார் ஆம்னி பேருந்துகள் மூலம் 3 லட்சம் பேரும் வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோரும் பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்றனர்.

14ஆம் தேதி புதன்கிழமை மட்டும் அரசுப் பேருந்துகளில் மேலும் இரண்டு லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

மொத்தத்தில், கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்