திருவண்ணாமலை: குடும்பத் தகராறு காரணமாக ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரத்தை கோவில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள கோனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி கஸ்தூரி. இத்தம்பதியர்க்கு இரு மகள்கள் உள்ளனர்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரரான விஜயனும் அவரது மனைவியும் பல ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, கஸ்தூரியின் உறவினர்கள் சிலர் விஜயனை மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால் விரக்தியும் கோபமும் அடைந்த விஜயன், அண்மையில் படவேடு பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று, ரூ.4 கோடி மதிப்புள்ள தன் வீட்டுக்கான பத்திரத்தை கோவில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினார்.
இந்நிலையில், கோவில் உண்டியலைத் திறந்து காணிக்கையாக வந்துள்ள பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, விஜயன் உண்டியலில் செலுத்திய பத்திரமும் அதில் இருந்தது.
மனைவியைப் பிரிந்த நிலையில், தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், விரக்தி அடைந்து கோவிலுக்கு தம் சொத்துகளை அளிக்க விரும்பியதாகக் கூறியுள்ளார் விஜயன்.
ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த மகள் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
எனவே, சொத்து பத்திரத்தைத் திருப்பித் தரக்கோரி, கோவில் நிர்வாகத்திடம் கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார். ரூ.4 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்க தனது தாயாரின் சம்பாத்தியமும் கைகொடுத்ததாக அவர் குறிப்பிட்டார். எனவே, தங்களுடைய அனுமதியின்றி தந்தை மட்டுமே சொத்து குறித்து முடிவெடுக்க இயலாது என்றார் அவர்.
ஆனால், கோவில் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கையைத் திருப்பித் தர இயலாது என இணைய ஆணையர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
“கோவில் ஆணையர் அலுவலகத்தில் பத்திரத்தை ஓப்படைப்போம். அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.