தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு

2 mins read
1bd2af11-919c-4211-b1c8-63f4269e2a93
தனுஷ், ஐஸ்வர்யா. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த புதன்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என குடும்பநல நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுசுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் 2004 நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

ஏறத்தாழ 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னர், ஐஸ்வர்யாவும் தனுஷும் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கடந்த 2022ஆம் ஆண்டு டுவிட்டரில் பதிவிட்டனர்

இருவருக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், தனுஷ்-ஐஸ்வர்யாவை நேரில் முன்னிலையாக உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த மனு நீதிபதி சுபாதேவி முன்னிலையில் நவம்பர் 2ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.

அதனால், வழக்கின் விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரும் வரவேண்டும் என உத்தரவிட்டார்.

அதனை ஏற்று, ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நடிகர் தனுஷும் வியாழக்கிழமை தனித்தனியாக நீதிமன்றத்திற்கு வந்தனர்.

அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையை பார்வையிட யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் நீதிமன்ற அறையின் கதவுகள் மூடப்பட்டன. மூடப்பட்ட அறையில் இருவரிடமும் நீதிபதி சுபாதேவி விசாரணை நடத்தினார். அப்போது, திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.

அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

மூன்று முறை விசாரணைக்கு அழைத்தும் வராத தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் வியாழக்கிழமை நீதிமன்றத்திற்கு வந்து தங்களது விவாகரத்தை உறுதிசெய்தனர்.

குறிப்புச் சொற்கள்