அரசியல் களம்காணும் தனுஷ்: 2031 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

அரசியல் களம்காணும் தனுஷ்: 2031 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

07 Oct 2026 - 7:42 pm

2 mins read

சென்னை: நடிகர் தனுஷ் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், அவருக்கு நடிகர் ரஜினிகாந்த்தின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை, உள்கட்டமைப்புப் பணிகளை வேகப்படுத்தி வருகிறார் தனுஷ்.

தனது அரசியல் கட்சிக்கு அவர் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ எனப் பெயர் சூட்டியிருப்பதாகவும் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கட்சிப் பெயரைப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எதிர்வரும் உள்ளாட்சி அல்லது மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடாமல், நேரடியாக 2031ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து அவர் தனது அரசியல் பயணத்தைத் திட்டமிட்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக அரசியலில் நிலவும் புதிய சூழலைத் தொடர்ந்து, தனுஷ் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட இருந்த நிலையில், உடல்நலப் பாதிப்பால் அவர் நேரடி அரசியலை விட்டு விலகினார்.

நடிகராக இருந்து தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்யின் அபார வளர்ச்சி திரையுலகத்தினரை மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, ரஜினி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

ரஜினி அரசியல் களம் கண்டிருந்தால் நிச்சயம் வெற்றி கண்டிருப்பார் என அரசியல் கவனிப்பாளர்கள் சிலர் உறுதிபடக் கூறியிருந்தனர்.

அவர் களத்தை விட்டு விலகினாலும், அவரது மருமகனாக இருந்த தனுசுக்கு நிச்சயம் ரஜினி ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியும் இதை எதிர்க்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ரஜினிகாந்த்தனுஷ்அரசியல்தேர்தல்