தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பவில்லை: மத்திய அரசு விளக்கம்

2 mins read
60ce2a44-80a7-43f0-bbd1-3e23f7fa7a22
தமிழ் ஆர்வலர்கள் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். - கோப்புப்படம்: ஊடகம்

மதுரை: கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை மத்திய கலாசார அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்து தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத்தின் அறிக்கை இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் அதை வெளியிடாத இந்தியத் தொல்லியல் துறை, அறிக்கையில் சில திருத்தங்களைச் செய்யுமாறு கடிதம் அனுப்பியது. இதனால் சர்ச்சை வெடித்த நிலையில், தமிழ் ஆர்வலர்கள் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், மத்திய கலாசார அமைச்சு இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளது.

“அகழ்வாராய்ச்சியாளர்கள் தயாரிக்கும் அறிக்கைகள், நிபுணர்கள் பரிசீலனைக்கு அனுப்பப்படும். நிபுணர்கள் பரிந்துரைக்கும் மாற்றங்கள், அகழ்வாராய்ச்சி செய்தவர்களால் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

“கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு, அகழ்வாய்வில் ஈடுபட்டோரின் அறிக்கையானது, நிபுணர்களின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.

“அதில், தேவையான திருத்தங்களை செய்வதற்கான நிபுணர்களால் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் தற்போதுவரை திருத்தம் செய்யவில்லை,” என கலாசார துறை கூறியுள்ளது.

கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிடுவதில் தொல்லியல் துறை அக்கறை காட்டவில்லை என்று ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி இந்த விவகாரத்தைத் தவறாக வழிநடத்துகிறது என்றும் அது உண்மைக்குப் புறம்பானது என்றும் கலாசார அமைச்சு விளக்கமளித்துள்ளது.

“அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட ஓர் இடத்தின் முக்கியத்துவத்தை, தலைமை இயக்குநரும், இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகளும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்குமுன் முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு, வடிவமைப்பு தேவையாக உள்ளது.

“கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்தியத் தொல்லியல் துறை அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதை. இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்திரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என கலாசார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்