மின்னிலக்கமயமான பட்டா மாற்றம்; கையால் எழுதப்படும் கோப்புகளுக்குத் தடை

மின்னிலக்கமயமான பட்டா மாற்றம்; கையால் எழுதப்படும் கோப்புகளுக்குத் தடை

1 mins read
c5c3725b-3bb5-49f2-b4b6-ba57267d6697
தமிழ்நாடு பட்டா மாறுதல் விண்ணப்பங்களை கையால் எழுதத் தடை விதிக்கப்பட்டு, இனி அனைத்து நில உட்பிரிவு ஒப்புதல் நடைமுறைகளும் மின்னணு முறையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என நில அளவைத் துறை உத்தரவிட்டுள்ளது. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: தமிழகத்தில் பட்டா மாறுதல் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களையும் இணையம் மூலமாகவே கையாள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா மாறுதல் நடைமுறைகளை மேலும் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றும் நோக்கில் இச்செயல்பாடு முழுக்க மின்னலக்கமாக்கப்பட்டுள்ளது.

நில அளவைப் பிரிவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பழைய நடைமுறைகளான கையால் எழுதப்பட்ட குறிப்புக் கோப்புகள் (Manual Note Files), கையால் வரையப்படும் வரைபடங்கள், வட்டாட்சியர்களால் கையால் எழுதி அங்கீகரிக்கப்படும் உட்பிரிவு அறிக்கைகள் ஆகியவற்றை இனி பயன்படுத்தக்கூடாது என்று நில அளவை, நிலவரித் திட்ட இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இனிமேல், கிராமப்புறம், நகர்ப்புறம், நத்தம் ஆகிய அனைத்து வகை நிலங்களுக்கான பட்டா மாறுதல் விண்ணப்பங்களையும் மின்னணு முறையிலேயே அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல், ‘கொலாப்லேண்ட்’, ‘தமிழ் நிலம்’ ஆகிய மென்பொருட்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் இந்தப் புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது சில இடங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இம்முறை, விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் பட்டா மாறுதலுக்காக அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருப்பதும், கோப்புகள் தேக்கமடைவதும் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டிலேயே இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இது முழுமையான மின்னிலக்க வடிவத்தைப் பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்