சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் உடற்குறையுள்ளோருக்கு நியமனப் பதவி வழங்க வகைசெய்யும் புதிய சட்டமுன்வடிவைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
புதன்கிழமையன்று (ஏப்ரல் 16) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், “இந்தச் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் நான் பெருமை அடைகிறேன். அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழியும் வாய்ப்பைத் தலைவர் கருணாநிதி எனக்கு வழங்கினார். அப்போது எப்படி பெருமை அடைந்தேனோ, அதே பெருமையை இப்போதும் அடைகிறேன்” என்றார்.
கருணை அடிப்படையில் மட்டுமல்லாமல் உரிமை அடிப்படையிலும் உடற்உறையுள்ளோருக்கான திட்டங்களை அரசு தீட்டி வருவதாகவும் இந்தியாவிலேயே அவர்களுக்குப் பேரளவில் நிதி உதவி வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் தமது உரையில் அவர் தெரிவித்தார்.
“அரசுப்பணி தேர்வில் அவர்களுக்கு அளிக்கப்படும் 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம் 493 பேர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். உடற்குறையுள்ளோருக்கு உதவும் நவீன கருவிகள் வழங்கும் திட்டம், மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் சிறப்பு மரப்பாதை ஆகியவற்றை அரசு உருவாக்கியுள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.
“சிறப்புமிகு அச்சட்டம் தாக்கல் செய்யப்படுவதை அவர்கள் பார்வையாளர்கள் இடத்திலிருந்து பார்க்க வேண்டும். அதனைக் கண்டு நான் மகிழ்ச்சியடைய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக நியமன உறுப்பினராக்கப்படுவர்.
“அதை நடைமுறைப்படுத்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் உடற்குறையுள்ளோரின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதோடு மட்டுமல்லாது அவற்றை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகவும் அவர்கள் திகழ்வர்,” என்றும் தமிழக முதல்வர் பேசினார்.

