வேட்புமனுவில் குளறுபடி: திருத்தம் கோரினார் நடிகர் விஜய்

வேட்புமனுவில் குளறுபடி: திருத்தம் கோரினார் நடிகர் விஜய்

1 mins read
ee400b6b-97b4-4c19-9c13-a2b8ab24074f
தவெக தலைவர் விஜய் அளித்த இரண்டு மனுக்களிலும் அவரது வயது வெவ்வேறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. - படம்: இந்து தமிழ் திசை
multi-img1 of 2

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் வயது, அவர் மீதான வழக்கு குறித்த விவரங்கள் முரணாக இருந்ததைத் தொடர்ந்து, அவற்றில் திருத்தம் செய்ய அனுமதி அளிக்கக் கோரி அக்கட்சியின் வழக்கறிஞர்கள் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தனர்.

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.

பெரம்பூரில் தாக்கல் செய்த மனுவில் தன்மீது வழக்குகள் ஏதுமில்லை என்றும் திருச்சி கிழக்கு மனுவில் இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், இரண்டு மனுக்களிலும் அவரது வயது வெவ்வேறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

விவரங்கள் முரணாக இருப்பதால் மனு நிராகரிக்கப்படலாம் எனப் பேசப்பட்ட நிலையில், தவெக தரப்பு விரைந்து நடவடிக்கையில் இறங்கியது.

இதுகுறித்து அக்கட்சியின் வழக்கறிஞர்கள் குழுவினர் கூறுகையில், “தகவல் பிழைகளைச் சரிசெய்ய சட்டப்படி இடமுள்ளது. அதனடிப்படையில், பெரம்பூர் தேர்தல் அதிகாரி புனித வள்ளியிடம் திருத்தக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

“விஜய்யின் தேர்தல் பிரசாரப் பயணம் காரணமாக வழக்கறிஞர்கள் மூலம் இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது,” என்றனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால், இந்தப் பிழைகளைச் சரிசெய்து புதிய உறுதிமொழி ஆவணத்தைத் தாக்கல் செய்ய தவெக திட்டமிட்டுள்ளது.

இதனால் அரசியல் வட்டாரத்தில் நிலவிய சலசலப்பு முடிவுக்கு வருமெனக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்