அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
அவரது முதற்கட்ட சுற்றுப்பயண விவரங்களின்படி வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் அவர் தனது பயணத்தைத் தொடங்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நாமக்கல், கரூர், கடலூர் என பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு விழுப்புரத்தில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தயாராகி வருவதால் போட்டி வலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதேபோல, தவெக தலைவர் விஜய் வருகிற செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தைக் கடந்த 1ஆம் தேதி தொடங்கிவைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.