சென்னை: வாக்குச்சாவடி வாரியாக வாக்குகளை உறுதிசெய்து தோ்தலில் வெற்றியை உறுதிசெய்ய இம்மாதம் 28ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என திமுகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை (அக்டோபர் 18) அறிக்கை வெளியிட்டார்.
சட்டமன்றத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில், பல்வேறு முன்னெடுப்புகளை திமுக மேற்கொண்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தை வளைக்க முயற்சி செய்யும் மத்திய பாஜக அரசுக்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் ஓர் அங்கமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற முன்னெடுப்பு தொடங்கப்படவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அதற்காக,கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினா்கள், சட்டமன்ற உறுப்பினா்கள், தொகுதிப் பாா்வையாளா்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள், மத்திய, நகர, பகுதி, மாநகரச் செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி காலை 9 மணியளவில் கூட்டம் தொடங்கும் என்றும் அதில் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டது.